Thursday, March 29, 2018
Bima Shree
Jeevan Shiromani
எல்ஐசியின் ஜீவன் சிரோமணி திட்டம்
எல்.ஐ.சி.யின் ரூ.1 கோடி காப்பு தொகை கொண்ட தீவர நோய் காப்பீடு மற்றும் விபத்துக்காப்பீடு அடங்கிய புதிய பாலிசியான ஜீவன் சிரோமணி என்ற புதிய பாலிசி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பாலிசியை நேற்று நெல்லை முதுநிலை கோட்ட மேலாளர் வசந்தகுமார் அறிமுக செய்து தொடங்கி வைத்தார் வணிக மேலாளர் வெங்கடகிருஷ்ணன், விற்பனை மேலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து நெல்லை முதுநிலை கோட்ட மேலாளர் வசந்தகுமார் கூறியதாவது:– நெல்லை கோட்டம் இந்த நிதியாண்டில் இதுவரை 64 ஆயிரத்து 354 பாலிசிகளின் மூலமாக ரூ.191 கோடியே 49 லட்சம் முதற் பிரிமியம் வருவாய் ஈட்டி தென் மண்டலத்தில் சாதனை புரிந்து உள்ளது. இதில் ஜீவன் அக்ஷயா என்ற பென்சன் திட்டத்தின் மூலம் மட்டும் ரூ.116 கோடியே 55 லட்சம் முதற்பிரிமியமாக ஈட்டி உள்ளது. இந்த பிரிமியம் விற்பனையில் நெல்லை கோட்டம் முதலிடத்தில் உள்ளது. தற்போது குறைந்த காப்புத்தொகை ரூ.1 கோடியில் அதாவது வசதிபடைத்தவர்களுக்காக ஜீவன் சிரோமணி என்ற புதிய பாலிசி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் குறைந்த அளவு பிரிமியம் ரூ.7 லட்சமாகும். பாலிசி காலம் 14, 16, 18,20 வருடங்களாகும். இதில் கடைசி 4 வருடத்திற்கு பிரிமியம் செலுத்தத்தேவையில்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இதில் இணையலாம். ஒரு வருடம் பிரிமியம் செலுத்திய பிறகு அதில் கடன் வாங்கி கொள்ளும் வசதி உள்ளது. வருடத்திற்கு ரூ.5 லட்சம் போனசாக பெறலாம். இந்த பாலிசியில் தீவிர நோய்காப்பீடு மற்றும் வீபத்துகாப்பீடு இணைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
எல்ஐசி யின் வைரவிழா
வைர விழா கொண்டாடும் ‘எல்ஐசி’ன் வெற்றி கதை..! இந்தியாவின் முதல் ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு உருவான ஒரு பொதுத்துறை நிறுவனமே இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்று அழைக்கப்படும் எல்ஐசி ஆப் இந்தியா. முதன்முதலில் இந்திய மக்களுக்குக் காப்பீடு என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி, சேமிப்புக்கு ஊக்கம் கொடுக்க ஊக்கதொகையாகப் போனஸ் என்கிற கவர்ச்சிகரத் திட்டங்களுடன் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது எல்ஐசி நிறுவனம். எல்ஐசி உள்நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனம். தனது அபரிமித வளர்ச்சியால் 72% க்கு மேல் லாபம் ஈட்டி 2017 ம் நிதி ஆண்டில் 19,000 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக இன்று வானளாவில் உயர்ந்து நிற்கிறது. நமது பணத்தை எல்ஐசி எங்கு முதலீடு செய்கின்றது? எல்ஐசி யின் வர்த்தகத்தில் மக்களின் சேமிப்புகள் ITCBSE, ONGCBSE, NHPCBSE, NTPCBSE, SBI, ICICI, COAL INDIA BSE, SAILBSE மற்றும் NMDCBSEஎன்ற நிறுவனங்களின் திட்டங்களில் பாதுகாப்பாக முதலீடு செய்யப்பட்டு நல்ல முதிர்வுத் தொகையுடன் வழங்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி எல்ஐசி நிறுவனம் 2016 - 2017ம் ஆண்டில் அரசுக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் 40% கூடுதல் போனஸ் மற்றும் ஈவுத் தொகையும் வழங்க முடிவு செய்திருப்பதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பயணத்தின் துவக்கம் இந்திய பாராளுமன்றம் 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ம் நாள் ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததன் தொடர்ச்சியாக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் செப்டம்பர் முதல் தேதி 1956 ம் ஆண்டில் தொடங்கப்பட்டு ஆயுள் காப்பீட்டு கொள்கையை நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தெரிவித்து அவர்களை ஏற்றுக் கொள்ள வைக்கும் பணியையும் செய்து கூடுதல் பயன் குறித்த திட்டங்களையும் அறிவித்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் முதிர்வுகளையும் வழங்கத் திட்டமிட்டது. கிளைகள் 1956 ம் ஆண்டில் அதன் முதன்மை அலுவலகம் தவிர்த்து 5 மண்டல அலுவலகங்கள், 33 கோட்ட அலுவலகங்கள் 212 கிளை அலுவலகங்கள் கொண்டு வளர்ந்தது. சந்தை விரிவாக்கம் சில ஆண்டுகளுக்குள்ளாகவே எல்ஐசி நிறுவனம் மேலும் பல புதிய கிளைகளைத் திறந்தது. 1957 ல் 200 கோடி புதிய வர்த்தகத்தைக் கொண்டிருந்த நிறுவனம் அடுத்தப் பத்து ஆண்டுகளில் அதாவது 1969-70 களில் 1000 கோடியைத் தாண்டியது. அதற்கடுத்த 10 ஆண்டுகளில் 2000 கோடி வர்த்தகம் என்ற இலக்கையும் எட்டியது. பரந்து விரிந்த கட்டமைப்பு இன்றைய நாளில் எல்ஐசி நிறுவனம் 2048 முழுதும் கணினி மயமாக்கப்பட்ட கிளை அலுவகங்களைக் கொண்டிருப்பதுடன், 113 கோட்ட அலுவலகங்கள், 8 மண்டல அலுவலகங்கள், 1381 இணையத் தொடர்பு அலுவலகங்களுடன் ஒரு முதன்மை நிருவாக அலுவலகத்தையும் கொண்டிருப்பதாக வளர்ந்துள்ளது. எல் ஐ சி யின் பரந்த கட்டமைப்பில் 113 கோட்ட அலுவலகங்களுடன் அனைத்து அலுவலகங்களும் மாநகர இணையத் தொடர்பு கொண்டு இணைக்கப்பட்டு மக்களுக்குச் சிறப்பான உடனடி சேவையை வழங்கி வருகின்றது. நிலையான வளர்ச்சி விகிதம் எல்ஐசி நிறுவனம் இந்திய காப்பீட்டுத் துறையில் ஆளுமை பெற்ற நிறுவனமாக உயர்ந்து விளங்கி விரைவான 16.67 சதவீத வளர்ச்சியையும் பெற்றுக் கோலோச்சி வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் ஒரு கோடி பாலிசி களுக்கு முதிர்வு தொகைகளையும் வழங்கி உள்ளது. தொடரும் பயணம் அந்த நாளிலிருந்து இன்று வரை எல்ஐசி நிறுவனம் தனது சீரிய முயற்சிகளினால் வளர்ச்சிகளினால் பல்வேறு மைல்கற்களைக் கடந்து வீறுநடை போட்டுச் சென்று கொண்டிருக்கிறது. இந்திய காப்பீட்டு வர்த்தகத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்து இன்று வரையில் ஆளுமை பெற்ற நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
எல்ஐசியின் மலரும் நினைவுகள்
கடந்த 50 ஆண்டுகள்... ஆயிரம் மடங்கு நிதி: எல்.ஐ.சி.,யின் 'மலரும் நினைவுகள்' பதிவு செய்த நாள்: ஜன 19,2015 04:45 4 இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்க்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். 1956 ஜன.,19 ல் மத்திய அரசு அவசர சட்டத்தை நிறைவேற்றியது. இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு இன்சூரன்ஸ் வணிகம் செய்தது தனியார் நிறுவனங்கள் தான். பல நிறுவனங்கள் இந்தியர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய மறுத்தன அல்லது கூடுதலாக 'பிரிமியம்' வசூலித்தன.இந்தியாவில் பிறதொழில்கள் துவங்க விரும்பியோர் அதற்கான முதலீடு தேவையெனில் முதலில் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தான் துவங்கினர். சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட சுதேசியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தை துவங்கினர். பாலிசிதாரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பாலிசி பதிவு செய்யாமல் இருப்பது, இறப்புக்கு பின் உரிய இழப்பீடு வழங்காதது, கம்பெனியை திவாலாக்குவது என ஊழல் மலிந்த துறையாகவும் இருந்தது.1956 வரை 250தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தன. 1956 லேயே இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கான சங்கம் துவக்கப்பட்டு ஊழலுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்தன. மும்பை போராட்டத்தின் முதல் தீர்மானமே 'இந்திய இன்சூரன்ஸ் துறையை தேச உடைமையாக்க வேண்டும்' என்பது தான். சுதந்திரத்திற்கு பின் முதல் பார்லிமென்ட் கூட்டம் நேரு தலைமையில் நடந்தபோது இன்சூரன்ஸ் ஊழல் பற்றி தான் விவாதிக்கப் பட்டது. முன்னாள் பிரதமர் இந்திராவின் கணவர் பார்லிமென்டில் பேசும் போது,' கவுடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் பட்டியலிட்டதை விட பல வழிகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன' என்று குறிப்பிட்டார். அவசர சட்டம் :19.01.1956 இரவு 8.30 மணிக்கு அப்போதைய நிதியமைச்சர் தேஷ்முக், ரேடியோ மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டார். 'மறுநாள் காலையிலேயே அனைத்து தனியார் நிறுவனங்களும் அரசுடைமை ஆக்கப்பட்டன. 'இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம்' முறையாக துவங்கப்பட்டது. கடைக்கோடி மனிதனுக்கும் காப்பீடு; மக்கள் சேமிப்பை மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்துவது; தனியார் நிறுவனங்களை ஆயுள் காப்பீட்டில் அனுமதிப்பதில்லை என்று அரசு முடிவெடுத்தது. ௧௯௭௨ல் வங்கி, எண்ணெய், பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. வரலாறு மாறியது :1999 ல் வாஜ்பாய் அரசு இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதாவை நிறைவேற்றியது. அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா 'இன்சூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது; அன்னிய நேரடி முதலீட்டை 26 சதவீதம் ஆக்குவது' என தெரிவித்தார். தற்போது மீண்டும் 49 சதவீதமாக உயர்த்துவதற்கான அவசர சட்டத்தை பா.ஜ., அரசு அமல்படுத்தி உள்ளது. எல்.ஐ.சி., தலைவர் எஸ்.கே.ராய், நிலைக்குழுவின் முன் ஆஜராகி 'இன்சூரன்ஸ் துறையில் உலகளவில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஒரே நிறுவனம் எல்.ஐ.சி., தான்' என தெரிவித்துள்ளார். 'அன்னிய நிறுவனங்கள் உள்ளே வந்தால் புதிய திட்டங்கள், தொழில்நுட்பங்கள் கிடைக்கும்; பிரிமியம் விலை குறையும்' என காரணங்கள் கூறப்பட்டன. இவை எதுவுமே இன்றுவரை நடக்கவில்லை. ௧டந்த 19 ஆண்டுகளில் உலகளாவிய பெரிய நிறுவனங்கள் இத்துறையை விட்டே ஓடிவிட்டன. எனவே அன்னிய நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்திற்கும் இந்திய மக்களுக்கும் உகந்தவர்களாக செயல்பட முடியாது. பென்ஷன், சுகாதாரம் குறித்த திட்டங்களில் சுளையாக லாபம் பார்க்க நினைப்பதால் தான் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க நினைக்கின்றனர்.உலகிலேயே இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு சேவைவரி விதித்த ஒரே நாடு இந்தியா தான். தற்போது முதிர்வுத் தொகைக்கு வரி வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசின் முதல் கடமை சேவை வரியையும், முதிர்வுத் தொகை மீதான வரிவிதிப்பையும் ரத்து செய்வது தான். பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான நேஷனல், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல், யுனைடெட் இந்தியாவை ஒன்றாக்கி வலிமையான பொதுத்துறை நிறுவனமாக மாற்ற வேண்டும். ஐந்து கோடி முதலீடு:எல்.ஐ.சி., துவக்க 1956ல் அரசுக்கான முதலீடு வெறும் ஐந்து கோடி ரூபாய் தான். ஆனால் 1961 ல் முடிந்த இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் அரசுக்கு எல்.ஐ.சி., கொடுத்த நிதி உதவி ரூ.184 கோடி. 12வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல்ஆண்டில் அரசுக்கு எல்.ஐ.சி., வழங்கியது மட்டும் ரூ. ஒரு லட்சத்து 84ஆயிரம் கோடி. '2ஜி' ஊழலைப் பற்றி பேசும் போது தான் இதன் மதிப்பு புரியும். 50 ஆண்டு கால வளர்ச்சியில் ஆயிரம் மடங்கு அளவிற்கு அரசுக்கு நிதியுதவி அளித்த வரலாறு உலகளவில் எல்.ஐ.சி.,க்கு மட்டுமே சாத்தியமானது.தேச வளர்ச்சி ஆயுள் காப்பீட்டில் பிரதிபலிக்கிறது. ஆயுள் காப்பீட்டின் வளர்ச்சி, தேச வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது. -என்.சுரேஷ்குமார், பொதுச் செயலாளர்,காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்94430 40768
எல்ஐசி
எல்ஐசி: 60 ஆண்டு ஆச்சரியம்! க.சுவாமிநாதன் இந்திய விடுதலை வயது 70-ஐத் தொட்டுள்ள இதே ஆண்டில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் 60-வது வயதை நிறைவுசெய்து வைர விழாவைக் கொண்டாடுகிறது. திலகரின் சுயராஜ்ய முழக்கம் சுதேசி காப்பீட்டு நிறுவனங்களின் பிறப்புக்கும், 1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டின் தீர்மானம் காப்பீட்டு நிறுவனங்களின் தேசியமயத்துக்கான விதைப்பிற்கும் வழிவகுத்தன என்பது வரலாறு. தொழிலகங்கள் இன்று மீண்டும் அந்நிய முதலீடுகளின் குறியிலக்குகளாக மாறிவரும் நிலையில், எல்ஐசி-யின் சாதனையை நாம் நினைவுகூர்வது நம்முடைய ஆட்சியாளர்கள் இன்று சென்றுகொண்டிருக்கும் பாதை எந்த அளவுக்குச் சரியானது என்பதை யோசிக்க உதவக் கூடியது. விதேசி டயப்பர்கள்… கடந்த ஜூன் மாதம் அந்நிய முதலீடுகளை மேலும் அதிகமாக அனுமதிப்பதற்கான அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டது. இதையொட்டி பேசிய பிரதமர் “உலகிலேயே அந்நிய முதலீட்டுக்கு அதிகமாகத் திறந்துவிடப்பட்டுள்ள நாடு இந்தியா” என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார். அந்நிய முதலீடுகளுக்கு ஆட்சியாளர்கள் கற்பிக்கும் நியாயங்களில் ஒன்று, “அந்நிய முதலீடுகள் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரும்” என்பது. ஆனால், நம் கைவசம் இருக்கிற தொழில்நுட்பங்களையே நாம் முறையாகப் பயன்படுத்துகிறோமா என்கிற கேள்வியை இதே அமைப்புக்குள் இருப்பவர்களே எழுப்புகிறார்கள். மார்ச் 15, 2016 அன்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் வி.கே.சுப்புராஜ் இப்படி ஒரு கேள்வியை முன்வைத்தார்: “உலக மருந்தகம் என்று அழைக்கப்படுகிற அளவுக்குப் பல வெளிநாடுகளுக்கு மருந்துகளை உற்பத்திசெய்து ஏற்றுமதிசெய்யும் இந்தியாவால் குழந்தைகளுக்குப் போடும் டயப்பர்களை உற்பத்திசெய்ய முடியாதா? ரூ.200 கோடிக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது ஏன்? மருத்துவமனைப் படுக்கைகளை இங்கேயே தயாரிக்க முடியாதா? புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை இயந்திரங்களை மூன்றிலொரு பங்கு விலையில் இங்கேயே உற்பத்திசெய்து மாவட்ட அரசு மருத்துமனைகளுக்கெல்லாம் தர முடியாதா?” பாதுகாப்புத் துறையில் ஜூலை 2014-ல் 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டது. ஆனால், பிப்ரவரி 2016 வரையிலான 18 மாதங்களில் இங்கே வந்த அந்நிய முதலீடுகள் எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.1 கோடி மட்டுமே. இதன் பின்னணி என்ன தெரியுமா? “அந்நிய முதலீடுகளோடு வரும் நிறுவனங்கள் தங்கள் தொழில்நுட்பத்தையும் இங்கு பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்று ஒரு நிபந்தனை இருந்தது. இது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. விளைவாக 2016 ஜூனில் இப்படியான நிபந்தனைகள் யாவும் கைவிடப்பட்டன. இது ஒரு உதாரணம்தான். எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், அந்நிய முதலீடுகளுக்கு நாட்டைத் திறந்துவிடும்போது ஆயிரம் நியாயங்களை அரசு சொல்கிறது. ஆனால், கடைசியில் என்ன நடக்கிறது என்றால், அந்நிய நிறுவனங்கள் லாபம் ஒன்றே தம் இலக்கு என்பதைத் தெளிவாக நமக்கு வெளிக்காட்டிவிடுகின்றன. இவை பொதுவெளியில் பலரின் பார்வைக்கு வருவதில்லை. அடுத்த இலக்கு காப்பீடு உலகமயப் பொருளாதாரத்துக்குச் சரியான பதிலை இன்றைக்கு இந்தியாவில் கொடுத்துக்கொண்டிருக்கும் துறை காப்பீட்டுத் துறை. அடுத்து அந்நிய முதலீட்டாளர்கள் அதையே குறிவைக்கிறார்கள். இந்தியக் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 26%-ல் இருந்து 49% வரை உயர்த்தப்பட்டபோது கடும் எதிர்ப்பு எழுந்தது. 2015-ல் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, “இந்தியர்களின் கட்டுப்பாடு உறுதிசெய்யப்படும்” என்ற ஷரத்து அதில் இணைக்கப்பட்டது. இப்போது அந்த நிபந்தனையையும் தளர்த்துமாறு அந்நிய முதலீட்டாளர்கள் கேட்கிறார்கள். இந்தத் துறையில் அந்நிய முதலீடுகளின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது. அவர்களின் இறுதி இலக்கு பொதுத் துறை நிறுவனங்களையே கைப்பற்றுவதுதான். அதற்காக வகுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் அரசுப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு விற்பனை நோக்கி அடுத்து நகர்கிறார்கள். “யுனைட்டெட் இந்தியா, ஓரியன்டல், நியூ இந்தியா, நேஷனல் ஆகிய அரசுப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் பங்கு விற்பனைக்கு ஆளாகும்” என்று அறிவித்திருக்கிறார்கள். இதனால் தேசத்துக்கு என்ன லாபம்? ஏற்கெனவே, 18 தனியார் பொதுக் காப்பீடு நிறுவனங்கள் வணிகக் களத்தில் உள்ளன. இவர்கள் பொதுக் காப்பீட்டு பரவலுக்காகச் சாதித்திருப்பது என்ன? இந்திய நகரங்களை ஆறு தட்டுகளாகப் பிரித்துக்கொண்டால், இன்றைக்குத் தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் எதைத் தங்கள் மைய நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன என்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் 1,742 அலுவலகங்களில் 1,706 அலுவலகங்கள் எங்கே இருக்கின்றன தெரியுமா? முதல் தட்டு நகரங்களில். அதாவது, 98% அவை முதல் தட்டு நகரங்களை மையமாகக் கொண்டே செயல்படுகின்றன. ஐந்தாவது, ஆறாவது தட்டு சிறு நகரங்களில் தனியார் பொதுக் காப்பீட்டு அலுவலகம் ஒன்றுகூட இல்லை. அரசு பொதுக் காப்பீட்டு நிறுவன அலுவலகங்களை எடுத்துக்கொண்டால், இந்த இரு தட்டு நகரங்களிலும் 1,285 அலுவலகங்கள் உள்ளன. இது 2015-ம் ஆண்டு காப்பீட்டு வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு ஆணைய ஆண்டறிக்கை தருகிற தகவல். யார் தேசத்துக்காகவும், யார் லாபத்துக்காகவும் பணியாற்றுகிறார்கள் என்பதற்கு இதைவிடவும் சாட்சியம் தேவையா? 60 ஆண்டு ஆச்சரியம்! இன்று 24 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்த்து நிற்கும்போதும் புது வணிக பாலிசிகளில் 76% என்ற சந்தைப் பங்கோடு எல்ஐசி எடுத்துள்ள விஸ்வரூபம் சாதாரணமானது அல்ல. 1956-1961-ல் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்துக்கு ரூ.184 கோடிகளைத் தந்த எல்ஐசி 12-வது ஐந்தாண்டு திட்டத்துக்கு முதல் நான்கு ஆண்டுகளில் (2012-2016) மட்டும் தந்திருக்கும் பங்களிப்பு ரூ.10,86,720 கோடி. பெரும் சாதனை அல்லவா இது! உலகமய யுகத்தில் அந்நிய முதலீடுகள் சர்வரோக நிவாரணி அல்ல. முறையாக நிர்வகிக்கப் பட்டால், பொதுத்துறை நிறுவனங்கள் வணிக லாபங்களைத் தாண்டி தேசக் கட்டுமானத்தோடும் வளர்ச்சியோடும் தொடர்புடையவை என்பதற்கு அற்புதமான உதாரணமாகத் திகழ்கிறது எல்ஐசி. காப்பீட்டுத் துறையில் இருந்து அது அனுப்பும் சமிக்ஞைகளை இந்திய அரசு புரிந்து செயல்பட்டால், இந்தியாவின் வளர்ச்சி உலகுக்கே முன்னுதாரணமாகத் திகழும்! க.சுவாமிநாதன், தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர்,